ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் - TPV25
இது திருப்பாவையின் 25-வது பாசுரம்.
உன்னைப் பிரிந்து யான்படும் துயர் நீக்குவாய்!
பெஹாக் ராகம், ஆதி தாளம்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*
நெருப்பென்ன நின்ற நெடுமாலே.,* உன்னை-
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
பொருளுரை:
தேவகி பிராட்டியின் மைந்தனாய் அவதரித்து, பிறந்த அந்த கரிய இரவிலேயே, வசுதேவரால் ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே யசோதையின் மகனாக, (உனக்குத் தீங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில்!) நீ ஒளித்து வளர்க்கப்பட்ட காலத்தில்,
அதைப் பொறுக்காது, உன்னை அழித்து விட வேண்டும் என்ற கம்சனின் தீய நோக்கத்தை பயனற்றதாக்கி, (அவ்வரக்கன் அழியும் காலம் வரை!) அவனது வயிற்றில் (அச்சம் என்கிற) ஓர் அணையா நெருப்பு போல் கனன்று நின்ற சர்வ லோக சரண்யனான கண்ணபிரானே !
நாங்கள் பணிவுடனும், பக்தியுடனும் நோன்புக்கான பறை வேண்டி உனை விரும்பி வந்துள்ளோம் ! எங்கள் விருப்பத்தை நீ நிறைவேற்றுவாய் எனில், இலக்குமிக்கு ஒப்பான உன் செல்வ அழகையும், உன் ஒப்பிலாப் பெருமைகளையும் பாடி, உன் பிரிவினால் வந்த துயர் நீங்கி, பாவை நோன்பிருந்து உன்னை வணங்கி வழிபட்டு, நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
பாசுர விசேஷம்:
தேவகிக்கு மைந்தனாய் பிறந்து, பிறந்த அன்றே கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு யசோதையின் மகனாக வளர்ந்த மாயக்கண்ணனின் அவதாரப்பெருமையை சூடிக் கொடுத்த நாச்சியார் இப்பாசுரத்தில் அழகாகப் பாடியுள்ளார் ! ஆதியும் அந்தமும் இல்லா அப்பரந்தாமன் 'பிறப்பு அற்றவன்' என்பது வேறு விஷயம் !
"ஒருத்தி மகனாய் பிறந்து" எனும்போது தேவகி என்னும் தெய்வத்தாயின் கர்ப்பத்தில், ஒரு ஜீவாத்மா போலவே உருவெடுத்துப் பிறந்த பரமாத்வாவின் உன்னதத் தன்மையை ஆண்டாள் சொல்கிறாள்.
ஜீவாத்மாக்கள் கர்மபலன் காரணமாகப் பிறப்பெடுக்கின்றனர். பரமனோ, தன் பரம அடியவரைக் காக்கவும், அவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவும் இப்படிக் கண்ணனாகப் பிறப்பெடுத்தான்! மனிதரின் பிறப்பு அவரை பரமனிடமிருந்து பிரித்து வைக்கிறது. ஆனால், பரமனின் பிறப்போ, அவனை மனிதருக்கு அருகில் கொண்டு வருகிறது!

ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - எப்படிப்பட்ட இரவு அது? வசுதேவர், சிறையில் பிறந்த சிசுவான கண்ணனை ஒரு கூடையிலிட்டு, இருளும், பெருமழையும், பேய்க்காற்றும் அவரை அலைக்கழிக்க, பெருக்கெடுத்து ஓடிய யமுனை ஆற்று வெள்ளத்தைக் கடந்து (அத்தூயப் பெருநீர் யமுனையும் பிளந்து அன்று பரமனுக்கு வழி விட்டதல்லவா?) பரமனை ஆய்ப்பாடியில் (இன்னொரு பாகவதையின் மகனாக வளர) கொண்டு சேர்த்த புண்ணிய இரவல்லவா அது!
கண்ணனின் அவதார ரகசியம் இப்பாசுரத்தில் பொதிந்துள்ளதாக பெரியோர் கூறுவர். உபநிடதத்தில் பரமனின் அவதாரங்கள் குறித்துச் சொல்லப்பட்ட "அஜாயமானோ பஹுதா விஜாயதே" என்பதன் பொருள் "பிறப்பற்றவன் பல பிறப்புகள் எடுக்கிறான்" என்பதாகும்! அதாவது, பரமன் தன் பரம பக்தைகளின் வயிற்றில் பிறப்பதென்பதே ஒரு வித மாயை தான்!
ஆண்டாள் பேர் சொல்லாமல் தேவகியை "ஒருத்தி" என்கிறளே! காரணம் இருக்கிறது!
புண்ணியத் தாயான தேவகியின் வேண்டுகோளின் பேரிலேயே, தன்னுடைய தெய்வாம்சத்தை மறைத்துக் கொண்டு கோகுலம் போய்ச் சேர்ந்தான் கண்ணன். பரமனே மைந்தனாக வந்திருக்கிறான் என்று தெரிந்தும், பிறந்த கணமே, தெய்வக் குழந்தையை பிரிய வேண்டிய சூழ்நிலை தேவகிக்கு!
தேவகியின் பக்தியும், பேரன்பும் போற்றுதலுக்குரியது! அண்ணனான கம்சனால் தேவகி அனுபவித்த துன்பங்கள் தான் எத்தனை? அத்தனையையும், தன் கண்ணனுக்காகத் தாங்கிக் கொண்ட உத்தமத் தாய் அவள்!
தனது ஆறு குழந்தைகளை தனது அண்ணன் கல்லில் அடித்து கொன்ற குரூரத்தை நேரில் காணும் அவலத்துக்கு ஆளானவள் தேவகி.
அவளைப்போல் இன்னொருத்தி இல்லை என்பதாலேயே, ஆண்டாள் தேவகியை "ஒருத்தி" என்றாள்!
யசோதை தேவகியைக் காட்டிலும் பெருமை மிக்கவள். கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தான். ஆனால் யசோதையோ, கண்ணனை தாலாட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கி, அவனது ரசிக்கத்தக்க சிறுதொல்லைகளையும், பால லீலைகளையும் பக்கத்தில் இருந்து அனுபவிக்கும் பெரும்பேறு பெற்றவள்! தாய்க்கெல்லாம் தாயன்றோ அவள்! பரமனின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கப் பெற்ற புண்ணியவதி அவள்! மண்ணைத் தின்ற கண்ணனின் வாயில் வையம் ஏழும் கண்டவள் அவள்!
கையும் காலும் நிமிர்த்துக் *கடார நீர்*
பையவாட்டிப்* பசுஞ்சிறு மஞ்சளால்*
ஐயநாவழித்தாளுக்கு* அங்காந்திட*
வையம் ஏழும் கண்டாள்* பிள்ளை வாயுளே.
என்று பெரியாழ்வார் பாடியுள்ளார்.

கண்ணன் அவளை பாடாய் படுத்தியபோதும், யசோதையைப் போல் வளர்ப்புப் பிள்ளையை வாஞ்சையுடன் கவனித்துக் கொண்ட தாய் அவனியில் கிடையாது. பெரியாழ்வார், கண்ணன் அடித்த லூட்டியால் யசோதா தெம்பிழந்த கதையை ஒரு பாசுரத்தில் அழகாகச் சொல்கிறார் :-)
கிடக்கில் தொட்டில் *கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில்* மருங்கையிறுத்திடும்*
ஒடுக்கிப்புல்கில் *உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கிலாமையால் *நான் மெலிந்தேன் நங்காய்
அந்தி சாய்ந்தும் கண்ணன் வீடு வந்து சேராததால், அச்சத்தில் உள்ளம் பேதலித்து தன் மகன் பயமும் அக்கறையும் இல்லாதவன் என்று யசோதா மறுகுவதை இன்னொரு பாசுரத்தில் அழகாக படம் பிடிக்கிறார் பெரியாழ்வார்!
கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*
நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்.*
மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிள்திரு வெள்ளறை நின்றாய்.*
நன்று கண்டாய் என் தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிடவாராய்
அப்பேர்ப்பட்ட யசோதையையும் ஆண்டாள் "ஒருத்தி" என்று தானே அழைக்க வேண்டும்!
பரமன் ஏன் மறைந்து வளர வேண்டும் ? அது அவன் சித்தம், அவ்வளவு தான்! கம்சனை அழிக்க வேண்டிய காலம் வரும்வரை ஆய்ப்பாடி மக்களோடு கோகுலகிருஷ்ணனாக வாழ பரமனே முடிவெடுத்தான்! எளிமையான ஆய்ப்பாடி மாந்தருடன் கண்ணனாக வாழ்ந்ததில் பரமனின் சௌலப்யமும், வாத்சல்யமும் வெளிப்படுவதாக வேதாந்த தேசிகர் சொல்லியிருக்கிறார்.
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
கண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான் என்ற செய்தி அறிந்தவுடன், கம்சன் தன் உடம்பையே தான் "தரிக்க முடியாமல்" உடலும் மனதும் தகிக்க, நெருப்பில் இட்ட புழுவாக துடித்ததைத் தான் ஆண்டாள் நயமாக ஒரே வார்த்தையில் "தரிக்கிலானாகி" என்கிறாள்! கண்ணன் பிறந்து கோகுலம் செல்லும் வரை, கம்சன் தனது எட்டாவது குழந்தையையும் கொன்று விடுவானோ என்ற பேரச்சம் என்ற தீயானது, தேவகி மற்றும் வசுதேவர் வயிற்றில் நிறைந்திருந்தது. பரமன் அவள் வயிற்றில் உதித்த மாத்திரத்தில், அவர்களுக்கு அபயம் கிடைத்து, அதுவரை நிர்பயமாக இருந்த கம்சனின் வயிற்றில் (அவன் அழியும் காலம் வரை) கண்ணனே ஒரு பய நெருப்பாக கனன்று கொண்டிருந்தான். மரணத்தை விட, கம்சனை வாட்டியது இது தான். அவன் செய்த கொடுமைகளுக்கெல்லாம் அவனுக்குக் கிட்டிய கர்மபலன் அது.

கம்சன் கண்ணனுக்கு தீங்கே நினைத்து இருந்திருந்தாலும், சதாசர்வ காலமும் பரமன் எண்ணமாக இருந்தான், தனது பயம் காரணமாக கண்ணனை எங்கும் பார்த்தான், அதனால், கம்சனுக்கும் மோட்ச சித்தியை அருளினான் நீலமேக வண்ணன்!
நெருப்பென்ன நின்ற நெடுமாலே
"நெடுமாலே" என்பது ஆண்டாள் கண்ணன் மேல் கொண்ட அபரிமிதமான காதலின் வெளிப்பாடே!
உன்னை- அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
கோபியர் கண்ணனிடம் 'உன்னையே உன்னிடம் வேண்டி நிற்கிறோம்! நிலையான செல்வமாகிய பிராட்டியை மார்பில் தரித்தவன் நீ! சதாசர்வ காலமும் உனக்குச் சேவை செய்யும் பெருஞ்செல்வத்தை நீ எங்களுக்கு அருளும் பட்சத்தில், நாங்களும் திருத்தக்க செல்வம் பெற்றாராகி, உனக்கும் பிராட்டிக்கும் ஊழியஞ்செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, உன்னை என்றும் பிரியாத பேரானந்த நிலையை அடைந்து மகிழ்வோம்' என்று சொல்கிறார்கள்.

கண்ணனின் மேல் கோபியர் கொண்ட பரம வாத்சல்யமும், பக்தியும் "உன்னை அருத்தித்து வந்தோம்" என்பதில் வெளிப்படுகிறது! "உன்னைத்தவிர எதுவும் வேண்டாம், நாங்களே நீ, நீயே நாங்கள்" என்ற நிலையை கோபியர் அடைந்து விட்டதை உணர முடிகிறது!
இதல்லவோ நயத்திற்கெல்லாம் நயம்!
பாசுர உள்ளுரை:
1. கண்ணன் பிறந்த அந்த கரிய இரவில், வசுதேவர் அந்த தெய்வக் குழந்தையை ஒரு கூடையிலிட்டு கோகுலத்திற்கு எடுத்துச் சென்றபோது, யமுனை நதியாள் விலகி வழி விட்டு கண்ணனின் அருளுக்கு உகந்தவள் ஆனாள் ! கோதை நாச்சியார், 5-வது பாசுரத்தில், "தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை" என்று மாயனை விளிப்பது இதனால் தானோ !
2. இப்பாசுரத்தில், ஆண்டாள் தேவகியையும், யசோதையையும், பெயரிட்டுக் கூறாமல், 'ஒருத்தி' என்றே குறிப்பிட்டுள்ளார். 'ஒருத்தி' என்பது இங்கே மரியாதைக்குரியதே.
3. 'ஓரிரவில்' என்பது சம்சார பந்தமான இருட்டை உள்ளர்த்தமாக குறிக்கிறது !
4. 'ஒருத்தி மகனாய் பிறந்து' காயத்ரி மந்த்ரத்தையும், 'ஒருத்தி மகனாய் வளர' மூல மந்த்ரத்தையும் குறிப்பில் உணர்த்துவதாக பெருக்காரணை சுவாமிகள் கூறுவார் !
5. 'ஒளித்து வளர' என்பதற்கு இரண்டு உள்ளர்த்தங்கள் கூறப்படுகின்றன.
(i) கண்ணன், பகவத் பெருமைகளை வெளிக்காட்டாமல், ஆயர்களோடு ஆயராக வளர்ந்தது
(ii) அடியார் சிற்றின்ப எண்ணங்களை கைவிட்டு பரந்தாமனை சிந்தையில் நிறுத்த வேண்டியது
6. தரிக்காலானாகி - சம்சார பந்தத்தை கைவிட்டு
7. தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து - நமது தீவினைகளை எண்ணி மருகி, அப்பாவ பலன்களிலிருந்து விடுபட அப்பரமனைப் பற்றுவதே உபாயம் என்றுணர்ந்து
8. உன்னை அருத்தித்து வந்தோம் - பரமபதம் சேர உன்னை நாடி வந்துள்ளோம்
9. திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி - கண்ணனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு முன், அப்பரமனின் மார்பில் குடியிருக்கும் தாயாரை முதலில் போற்றி வணங்க வேண்டியதை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். 'திருத்தக்க செல்வம்' என்பதற்கு திருவை (திருமகளை) உடைமையால் வந்த செல்வம் என்றும், திருவும் விரும்பத்தக்க செல்வம் (அதனால் தான் திருமார்பன்!) என்றும் கூட பொருள்படும் !
10. வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து - உலகப்பற்றை உதறி, பரிபூர்ண ஆனந்த நிலையை அடைவதை உள்ளர்த்தமாகக் குறிக்கிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 279 ***
8 மறுமொழிகள்:
Test comment !
சூப்பர்,படமும் விளக்கமும்.
பெஹாக் ராகத்தில் இப்பாடலை கேட்டால் உருகாமல் இருக்க முடியுமோ! நன்றி பாலா.
கொத்ஸ், குமார்,
வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி. உங்களைப் (குமரன், KRS) போன்றவர்களுக்காகத் தான் திருப்பாவைப் பதிவுகளை எழுதுகிறேன்.
எ.அ.பாலா
test !
பாலா அண்ணா வழக்கம் போல் விளங்களும் படங்களும் அருமை.
//உடலும் மனதும் தகிக்க, நெருப்பில் இட்ட புழுவாக துடித்ததைத் தான் ஆண்டாள் நயமாக ஒரே வார்த்தையில் "தரிக்கிலானாகி" என்கிறாள்//
ஆண்டாள் த கிரேட். விளக்கம் சொன்ன அண்ணாவும் கிரேட்.
//"உன்னைத்தவிர எதுவும் வேண்டாம், நாங்களே நீ, நீயே நாங்கள்" //
அத்வைதம் பேசறாளா ஆண்டாள்.
பாசுர உள்ளுரை நயத்திற்கெல்லாம் நயம்.
//அத்வைதம் பேசறாளா ஆண்டாள்.
//
விசிஷ்டாத்வைதமும் பேசுவாள் :) நன்றி.
அருமை
Post a Comment